வெள்ளி, 21 மே, 2021

தனிமை 

தனித்திருக்கின்றேன் 
சில காலங்களாக தனித்திருக்கின்றேன் 
சாலையில் - கூட்டத்தில் 
கடைகளில் கூடயில் 
வங்கிகளின் வரிசையில் 
உறவுகளை காணயில் 
நண்பனுடன் கதைக்கையில் 
தனித்திருக்கின்றேன் ....

புன்னகையை புதைத்துவிட்டு 
கரங்களை ஒளித்துக் கொள்கின்றேன் 
தீண்டாமையின் துன்பத்தை 
முழுதாக உணர்கின்றேன்...
நொடிக்கொருமுறை 
அடிக்கொருமுறை 
கைப்பேசியை திறக்கிறேன் 
செய்தி பார்த்து துடிக்கிறேன் ....

அங்காடித் தெருக்களில் 
பெருங்கூட்டத்தின் மத்தியில் 
அமிலத்தின் அண்மையை தவிர்க்க 
ஓடி ஒளிகின்றேன் ...

ஏன் ?!....

பெருந்தொற்றாம் 
ஆட்கொல்லியாம்...
அருகில் நின்றாலே ஆட்கொள்ளுமாம் 
வேண்டாத கடவுளெல்லாம் 
எனக்கு வேண்டாத கடவுள்ளலாம் 
வரமருள வேண்டியும் 
வைத்தியசாலைக்கே வழி சொல்லின...

கருப்பங்காடுகள் எரிவதுபோல 
மனிதர்கள் எரிந்திருக்க ...
அடியாழத்தில் புதைத்திருக்க...
எள்ளி  நகைக்கின்றது "நான்"

தனித்திருக்கின்றேன் 
சில காலங்களாய் 
சொந்த வீட்டுக்குள்ளும் 
தனியறை தனிமையில்.

கைபேசிக்கடவுளின் கருணையால் 
காதருகே வரும் அனைவருக்கும் 
ஒன்றுபோலவே சொல்லுகிறேன் 
தனித்திருங்கள் 
இந்த தனிமையை ஒழிக்க...

காணாக்கடவுள் 
கண்கொண்டு காத்திருக்க வேண்டி 
கண்ணிறைந்த கடவுளாம் 
தூய்மை- சுகாதார பணிசெய்யும் 
கடவுள்களின் கரங்களில் 
நாளை விடியலை விட்டுவிட்டு 
கண்மூட விழைகின்றேன்...

ஆனால் 

கனவும்கூட 
தனிமையைதான் வெளிச்சமிட்டு மிரட்டுகிறது.

விடியட்டும் நாளை 
கூடி களித்திருக்க .....