சனி, 21 ஜூலை, 2012

பிரிவு

பிரிவு


தேங்காய் உடைத்து
எல்லோரும் கடை மூடும்
ஒரு வெள்ளிக் கிழமை
என் இதயம் உடைத்து
நம் காதலை மூடினாய் !

குருதியால் எழுதிய
என் கடிதம் கண்டு நீ
கதறி அழுது தோள் சாய்ந்து
" வேண்டாண்டா ,
இப்படி செய்யாதே!"
என்றென்னை அணைத்துக்கொண்டாய் !

ஆற்றோர மாலை சந்திப்பில் ,
விளைந்த நெற் கதிராய்
மடியில் சரித்து என் மீது
கவிழ்ந்து கதைப்பாய்
இதயங்களின் பாச மொழி
இதழ்களில் படிக்கப்பட்டுக்கொண்டிருக்கும்!

குளிர் கால சூரியன் போல 
தாமதமாய் வந்து 
சீக்கிரமாய் போய் விடுவாய் ,
கழிந்த  நொடிகளிலும்
சேர்ந்து  களித்த நொடிகளிலும் 
வாழ்ந்து...... வாழ்ந்து.,
சிரித்து ....... சிரித்து .,
நினைத்து ...... நினைத்து.,
உருகி ....... உருகி
கவிதைகள் எழுதிக்கொண்டிருப்பேன் .,
அடுத்த சந்திப்பில்
படித்து பாராட்டி தலைகோதி
" என் மீது
இவ்வளவு காதல?!".,
என்று ஆச்சரியம் காட்டி
என் தோள்  புதைவாய்!

திரைப்பட அரங்கின்
மெல்லிய இருட்டில்
விரல்கள்  சேர்த்து இறுக்கி
பிரியோம் என்
உறுதி மொழி எடுத்தோம்!

உன் அம்மாவுடன் வரும்பொழுதும் .,
அப்பாவுடன் வரும்பொழுதும் .,
தம்பியுடன் வரும்பொழுதும்
யாரும் உணரா சாடைகள் மூலம்
உறவினை அறிமுகம் செய்து
மின்னல் வெட்டாய்
குறும்பாய் சிரித்துப் போவாய்!

பிரியோம் ..... பிரியோம்  என 
நான் இருமர்ந்திருந்த பொழுதினில்தான் 
நீ............... 

நீச்சல்

நீச்சல்


ஒரு
பூவின் இதழ்களை....
இதழ்களின் வேர்வையை 
பனி துளிகளை 
நாசி படர  நுகர்ந்து .....

தாமரைத் தண்டினை
வளைத்தெடுத்து .,
மலரா மொட்டுகளில் நீந்தி ..,
ஆழக்குளத்தரை  தொட்டு .,
மகிழ்ந்து களைத்து
கரையினில் அயர்ந்தேன் .,
பரிவும் உயிரும் கசிய
அன்பாய் அலைகளால்
என்னைத் தடவ
அரைக்கண்கள் திறந்து பார்த்தேன் .,

தளர்ந்த உன் கண்கள்
என் உயிரினை கட்டி
ஆதரவாய் படர்ந்திருந்தது!




வெள்ளி, 20 ஜூலை, 2012

காதல்

காதல்

காதலுக்கு முகவரி கொடுத்தவர்கள்
என்று சிலரை சொன்னார்கள் .,

ரோமியோ - ஜூலியட்
அம்பிகாபதி - அமராவதி .,
லைலா - மஜ்னு .,
அனார்கலி - சலீம் .,
ஷாஜஹான் - மும்தாஜ்
என உதாரண ஜோடிகள் நீள.,

மெள்ள  காதலை  கேட்டேன் .,
"இவர்களின் முகவரியிலா
வாழ்ந்து கொண்டிருக்கின்றாய் ?!"

நகைத்தது காதல் .,

"உலக தோற்றத்தின்
உயிர் நான்.,
ஒவொரு உயிரின்
சுவாசம் நான்.,
மனிதனில் உருவாகவில்லை நான்
அணுக்களில் தொடங்கி கருவானேன் !
இவர்கள் எனக்கு முகவரியல்ல
என் முகவரியில் அவர்கள் வாழ்கிறார்கள்."

"எப்படி?! " என்றேன்.

"காதல் இல்லையேல் 
இந்த காவியங்கள் இல்லையே !." 

வியாழன், 19 ஜூலை, 2012

அன்பு

அன்பு

அன்பு  செய்
அன்பு தீர்ந்து போகும் வரையல்ல !
நீ தீர்ந்து போகும் வரை !

கோபம் கொள்
நீ தீர்ந்து போகும் வரையல்ல
தீது தீர்ந்து போகும் வரை!

காதல் செய் 
காதல் முடியும் வரையல்ல 
உலகம் முடியும் வரை !

நன்மை  செய் 
கொஞ்சம் உன் பொருட்டும் 
பெய்யட்டும் மழை ! 

கிறுக்கல்

கிறுக்கல்


மழலையின் கிறுக்கலுக்கும்
உயர் அதிகாரியின் கையொப்பத்திற்கும்
வேறு பாடுகள் பல உண்டு !

அது அழகாயிருந்தது ,
இது அவசியமாய் இருந்தது !

அது உயிரை  நிறைத்தது ,
இது வயிறை  நிறைத்தது !

அது வெற்று காகிதம் முழுதும் நிறைக்க,
இது ஒரு மூலையில் அடங்கும் !

அது கோப்புகள் பிரிதறியாது .,
இது கோப்புகள் பார்த்தெழுதும் !

சொல்லவெல்லாம்  எத்தனையோ  இருந்தாலும் 
தன் மழலையின் கிறுக்கலுக்கு
உயர் அதிகாரியும்  அடிமைதான் !.

வியாழன், 12 ஏப்ரல், 2012

இதயப் பூட்டு

இதயப் பூட்டு



உன்னை விட்டு விலகின
என் காதலுக்கு
இறுதி அஞ்சலி செலுத்தின கையோடு
பேசுகிறேன் உன்னோடு!


என் மீது
உன் பார்வைகள் படர்ந்தும்
படாத உன் இதயம்   

நீ
அருகினில் வந்தும்
தொலைவாயிருந்த உன் காதல்.



நீ உயரத்தில் இருந்தாய்
நான் பள்ளத்திலிருந்தேன்,

பின்னாளில்தான் உணர்ந்தேன்.,

நீதான் பள்ளத்தாக்கிலிருந்தாய்,
நான் சிகரத்தில் வீற்றிருந்தேன்
நான் என்னவோ சிதற தயாராகத்தான் இருந்தேன்.,

ஆனால்,

பூகம்பம் உன்னில்தான்
உருவாக வேண்டும்.


இதனை என்றேனும்
படிக்க நேர்ந்தாலும் - நீ
ஏதோ ஒரு எழுத்தென
இகழ்ந்துவிடுவாய் எனத் தெரியும்.


என் காதல்
சரியான சாவிதான்,
ஆனால்,
உன் இதயப் பூட்டோ
துரு பிடித்து உதிர்ந்துவிட்டது!






பிரிவின் சந்தோசம்

பிரிவின் சந்தோசம்


என் இருதயத்தில் செருகிய
கத்தியில் உன் பெயர் இருந்தது
நம்புவதற்கு இயலாமல்

என் குருதி வழிந்தோடியது

குருதியில் நீ இருந்தாய்

என் கண்கள் இருண்டபோது
தூரத்தில் உன் உருவம் தெரிந்தது

உடல் தளர்ந்து வீழ்ந்தபோது
உன் பெயரெழுதிய கத்தி
என்னை தாங்கிக்கொண்டு
முதுகின் வழியாய் வெளி வந்தது

என் நினைவு மறையும் பொழுது
என் செவியில் விழுந்தது
உன் சதோஷ குரலோசை
சிரித்துக் கொண்டேன்
என் காதல் உன்னை இப்பொழுதாவது
சந்தோஷப் படுத்தியதே!

சனி, 7 ஏப்ரல், 2012

காலம்

காலம் ....

காலத்திற்கு தக்க
கருத்துக்களை மாற்றிகொள்பவன்
தந்திரசாலி
 காலங்கள் முழூமைக்கும் ஏற்ற
ஒரு கருத்தினை  சொல்பவன்
புத்திசாலி!

ஞாயிறு, 25 மார்ச், 2012

தாமரை இலை தண்ணீர்

தாமரை இலை தண்ணீர்


ஏழாம் வகுப்பில் ஓர் நாள்
அறிவியல் தேர்வு நடந்தது
அறிவியல் வாத்தியார் ரொம்ப
கோவக்கார வாத்தியார்.,

அவர் வச்ச பரிச்சையில
சின்னதா ஒரு கேள்வி

''தாமரை இலையில் நீர் ஒட்டுவதில்லை ஏன்?"

பக்கத்திலிருந்த பையன்
அழகா  எழுதியிருந்தான்  இப்படி

"தாமரை இலை மீது லட்சுமி உட்காருவதால்
தண்ணீர் ஒட்டுவதில்லை"

அதுக்கப்புறம்தான் தெரிஞ்சது
தாமரை இலையில மட்டும் இல்லை
கண்ணுல கூட தண்ணீர் நிக்காதுன்னு!

பிரிவு

பிரிவு


நல்லதுதான்
இது நல்லதுதான்

என் இருப்பை உனக்கு சொல்லும்
என் அன்பை உனக்கு சொல்லும்
என் பொறுமையை உனக்கு சொல்லும்
என் தேவையை உனக்கு சொல்லும்
என் அணைப்பை உனக்கு சொல்லும்
என் காதலை உனக்கு சொல்லும்

நல்லதுதான்
இது நல்லதுதான்

இந்த பிரிவினை மட்டும்
நீ தேர்ந்தெடுக்காமல் போயிருந்தால்
நான் யாரென்பதை நீ
உணராமல் போயிருப்பாய்

ஒரு வேளை நீ
உணராதது போல் வேடமிடலாம்

என்றாலும் உன் மனது உனக்கு சொல்லும்

நான் யாரென்பதை !....



வெள்ளி, 2 மார்ச், 2012

மூக்கொழுவி

மூக்கொழுவி



மூக்கொழுவி

 
சின்ன வயசில
தென்னை மட்ட வண்டில
தெரு புழுதில
முடியெல்லாம் மண்ணாகி
ஒடம்பெல்லாம் அழுக்காகி
அருணாகொடி போட்டும் நிக்காத கால் சட்டை
மாட்டிகிட்டு வளையவந்த 
காலங்கள் நினைப்பிருக்கு

எல்லாரும் சேந்து  ஒண்ணா 
விளையாடும் போது    நாங்க
வேண்டாமுன்னு விரட்டிடுவோம்
மூகொழுவி கவிதாவ...

காலம் பல மாறி
காதல் பல தோத்துபுட்டு.,
தாடி வளர்த்து - தாடி எடுத்து
புது காதல் பல தேடி தேடி
கன்னாபின்னான்னு  களைசிருக்க

தேவத ஒருத்தி தென்றலா
தாண்டிப் போனா....

யாருடா அவன்னு  
காதல சொல்லப் போனா

நெத்தி தழும்பு அவ யாருன்னு சொல்லிடுச்சி..

பருவத்துல பன்னியும் அழகும்பாங்க

இல்லங்க

அவ பருவத்துல
பருவமே அழகா  இருந்தது

எப்படி போய் நான் சொல்ல

உன்ன நான் காதலிக்கிறேன்
மூக்கொழு... இல்லை இல்லை.... கவிதான்னு .!





வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

சுதேசி

சுதேசி



டாலர் நம்மை விழுங்கிவிட்டது
பரபரப்பாய் அலைந்து
பணத்தைத் தேடி நம்மை
தொலைத்து விட்டோம்!

சுதேசி பிரச்சாரகர்களின் 
விதேசி மகிழுந்து ஊர்வலம்
தைக்கப்பட்ட வாய்களோடு
பாமாலை பாடுகிறது

சாதியொழிப்பு போராட்டத்தில்
திராவிடம் அழிந்து ஆரியம் தளிர்க்க
திராவிட தலைவர்களின்
மஞ்சள் துண்டு ஊர்வலம்!

புரட்சிக்காரர்கள்
தீவிரவாதிகளாக காட்டில்.,
கொள்ளைக்காரர்கள்
அரசியல்வாதிகளாக நாட்டில்.!

மன்னராட்சி அழிந்து
மக்களாட்சி மலர்ந்த தேசம் .,
நாட்டை ஆள இங்கு
புதிய புதிய மன்னர்கள்!

அதிகாரங்கள் நொறுக்கும் விரல்கள்
ஐந்து வருடங்கள் துருபிடித்து கிடக்க.,
தொலைத்த நம்மை அடிமையாய் கண்டு
மீட்டெடுத்து மீண்டும் தொலைத்துவிட்டோம்!.


தொட்டில் குழந்தையின் தாலாட்டு !...

தூளியிலே போட்டு என்னை
தாலாட்ட வேண்டாம் அம்மா!

மடியினில் ஏந்தி எனக்கு
பாலூட்ட வேண்டாம் அம்மா!

போகையிலும் - வருகையிலும் என்னை
சுமந்து திரிய வேண்டாம்  அம்மா!

காலிலே கிடத்தி என்னை சுடுநீரில் 
குளிப்பாட்ட வேண்டாம் அம்மா!

பொட்டிட்டு  பூவிட்டு புத்தாடை எனக்கு
அணிவிக்க வேண்டாம் அம்மா!

உன் பார்வையினோரம் என்னை ஒரு
கிழிந்த பாயிலேனும் கிடத்தி
பார்த்திருக்கக் கூடாதா அம்மா?!

பெண் என்று என்னை அநாதையாக்கிவிட்டு 
வீதியிலே போட்டு விட்டாய் .,

யாரேனும் கண்டெடுக்கும் முன்பு என்னை 
ஒரு பூனை கடித்து தின்னலாம் .,
தெரு நாய்கள் குதறலாம்.,
கொடும் வெயிலும் சுடலாம்., 
கடும் மழையிலும் நனையலாம்.,
உன் மடி தரும் பாதுகாப்பை
இந்த தெரு தருமா அம்மா?!

பயங்கொள்ளும் கனவு கண்டு 
வீறிட்டு நானழுதால் 
யாரென்னை அள்ளி எடுத்தணைத்து 
ஆற்றித் தேற்றுவார் அம்மா?!

பசி கொண்டு நானழுக 
எந்த பால்மடி ஊறி எந்தன் 
பசி தீர்த்து மகிழுமம்மா?!

வளரும் பொழுதினிலே அநாதை என்றென்னை 
யாரேனும் இடித்துரைக்க நேரலாம்,

முறை தவறி பிறந்தவள் என என்னை
பழி கூறி தூற்றலாம் !

என்றோ நீ செய்த கனநேர தவறுக்கு
என்னாயுள் முழுவதும் என்னை
தணலிலே விடுவது ஞாயமா அம்மா?!
குறையுள்ள தாய் ஒருத்தியும்  இல்லையாம்,

உண்மையை சொல் அம்மா.,
நீ தாயா? - பேயா?!
என் வாழ்க்கை பாதையெங்கும்
பெயர் தெரியா அம்மா ..,
முகம் தெரியா அம்மா....
உன் பெயர் தாங்கிய முட்க்கள்தானே!.

நீ பிறவா  நொடிகள் இருந்திருதால்
எத்துனை நலமாய் எனக்கு
இருந்திருக்கும் அம்மா !








புதுப்பி

புதுப்பி 


அடிக்கடி
புரட்டிப் பார்த்து.,
நினைத்துப் பார்த்து.,
படித்துப் பார்த்து.,
என்னதான் புதுப்பித்தாலும் 
இறந்தவனின் நினைவுகளாக
நம் காதல் ! 

பிறந்த நாள்

பிறந்த நாள்


இன்றைய  நாளில்
அன்றொரு நாளில் பிறந்தேனாம்,

நன்று,

என்ன செய்தேன் இந்த உலகிற்கு?!

இத்தனை வருடங்களும்
புகை போல கரைந்ததை
நாட்கள் வீணில் மறைந்ததை
ஊர் கூட்டி கொண்டாடுகிறோம் - கேவலமாய்

இனியாவது - இந்த வருடம்
மரிக்கும் முன்னாவது
செய்வோமா ஏதேனும் நல்லது - உலகுக்கு ?!.

ஒவ்வொரு பிறந்த நாளும்
இறந்தநாளை நினைவூட்டுகின்றது

உறுதி எடுத்தேன் நான் இன்று
நன்மை செய்ய தவறினாலும்
செய்யேன் யாருக்கும் நான் - தீமை!

திங்கள், 13 பிப்ரவரி, 2012

இதயத்தின் மௌனம்

இதயத்தின் மௌனம்


என்
இதயத்தின் ஆழத்தில்
உன் காதல் தூங்குகின்றது!

உன்
இதயத்தின் ஆழத்தில்
என் காதல் மரணிக்கின்றது !

என் செவிகளில்
உன் பேச்சும்,
என் இதழ்களில்
உன் பெயரும்!

நீயோ
உன் செவிகளை அடைத்துக்கொண்டு
வார்த்தைகளால் வசை பாடுகின்றாய்!

உன் பிரிவின் துயரத்தை
உன் காதல் உணரா வண்ணம்
என் இதயத்தில் அமைதியாய்
உறங்க வைத்திருகின்றேன் !

நீயோ போய்விட்டாய்

கண் முன்னே உயிர் பிரிவது போல
நீ போய் விட்டாய்

போருக்கு பிந்தைய அமைதியாய்
என் மனம்
மௌன பாடல்களோடு!

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

அன்பு காட்டுங்கள்


அன்பு காட்டுங்கள்
 ஷோபனா சின்னதுரை
என் சக மானிடரே
ஒருவருக்கொருவர் அன்பு காட்டுங்கள்

ஆசை முத்தம் குழந்தைக்கு
அன்பு முத்தம் உடன் பிறந்தோர்க்கு
நேச முத்தம் நண்பருக்கு
காதல் முத்தம் காதலுக்கு
மோக முத்தம் வாழ்க்கை துணைக்கு

முத்தத்தின் மூலமும்   அன்பு காட்டுங்கள்

முத்தம் பிறக்கும்  உதட்டிலிருந்து ஏன்
வசை மொழி கொட்டுகிறீர்கள்?!

உதட்டு முத்தத்தால் உள்ளங்களை இணைக்கலாம்
ஏன் உள்ளங்களை பிளக்கின்றீர்கள் ?!

என் அன்பு மானிடரே
அன்பு காட்டுவதில் முதலாய் இருப்போம்
வஞ்சகம் பேசுதலில்  கடையிலும் கிடவோம்!

வாருங்கள் உலகுக்கு அன்பு காட்டுவோம்!

ஏன்?!


ஏன்?!

மறந்துவிடுகிறேன்


மறந்துவிடுகிறேன்


வாழ்வும் - சாவும்



வாழ்வும் - சாவும்

சனி, 11 பிப்ரவரி, 2012

பகலில் ஒரு இரவு

பகலில் ஒரு இரவு

விழி

விழி

விழி திறக்கையில்  
உன் முகம் காண வேண்டும்

விழித்திருக்கையில்
உன் முகம் நானாக வேண்டும்

மீனுக்கும் - உன்
விழி மீனுக்கும்
வேறுபாடு ஏதுமில்லை
இரண்டும் நீந்துகின்றன
மீனுகுணவு - புழு
உன் விழி மீனுக்குணவு - நான்!

உன் விழிகளைப் பற்றி
என் விழி விரிய
எத்தனயோ சொல்லலாம் ...

உன் விழியின்
உண்மை அறிய
என் விழிக்குள் பார்!....

புதன், 8 பிப்ரவரி, 2012

பயணம்

பயணம்


இருவூரிலிருது
ஒருவூர் வந்தேன்

 கருவூரில் வளர்ந்து
வெளியூர் குடி புகுந்தேன்

வெளியூர் வந்தபின்னே
என்னூராய் ஆக்கிக் கொண்டேன்

எண்ணூரில் எத்தனையோ
பயணிகளை நான்
கண்டேன்,
பழகினேன்,
சண்டையிட்டேன்,
சமாதானம் சொன்னேன்,

என்னூரிளிருந்து
மேலூர் செல்லும் நாள் வந்தது

அப்போதுதான்
கீழூர் போகிறாயா?!
மேலூர் போகிறாயா?!
என்று கேட்டார்கள்...

அடடா

இத்தனை நாளும்
எவ்வூர் போவதென்று
எம்முடிவும் எடுக்கவில்லையே!...

திசை கெட்டு
அலைந்து விட்டேன்

எவ்வழி
 நான் செல்லும் வழியென்று
தெரியாமல் விழித்தேன்

தமிழ் முன்னோடி ஒருவன் சொன்னான்

" யாதும் ஊரே
யாவரும் கேளீர் "

என்று நீ வாழ்ந்திருந்தால்
மேலூர் உனது .

இன்றேல் கீழூர்  உனது..






திங்கள், 6 பிப்ரவரி, 2012

முன்னுரை

முன்னுரை



இதைத்தான்
உனக்குத் தரவேண்டுமென்று
நீண்ட நாளாய் விரும்பினேன்.

ஒரு கதை.,
ஒரு கவிதை.,
இதோடு நான்!.

எல்லாம் நன்றாய் இருக்கின்றது
என்று நீ சொல்வாய்.,
என்னையும் சொல்வாயா?!



இதுதான்
கடைசி தீக்குச்சி
எதிர்ப்புக் காற்றை மீறி
எரிகின்றேன்.,
உன்னை பற்றவைத்துக்கொள்!.


இங்கேதான்
உன் வாழ்வை ஆரம்பிக்கப் போகின்றாய் .,
உனக்கு என்ன தேவையோ
தேடி எடுத்துக் கொள்.,
நானும்
கீழேதான் கிடக்கின்றேன்!.


இதை கடைசிவரை படித்துக்கொள்.
நீ படிக்காமல் விட்டுவிட்டாலோ,
அல்லது மறந்துவிட்டலோ
உன் பெருமையும் - அருமையும்
உனக்கு
தெரியாமலே போய்விடும்.


முடித்தவுடன்
மறக்காமல் ஒரு முத்தம்கொடு
என் வரிகளுக்காவது  !.


என்னுள் கையெழுத்திட்டவள்

என்னுள் கையெழுத்திட்டவள்
ப.அலெக்சாண்டர்


தேனீர் அருந்தென்றால்
என் கண்ணீரே
உனக்குப் போதுமென்கின்றாய்.,

வார்த்தைகளோடு போராடலாம்
மௌன உணர்வுகளோடு போராட முடியாது.
நான் உன்னுடன் மௌன
உணர்வுகளோடு போராடிக் கொண்டிருக்கின்றேன்.,

இன்னும் எத்தனை காலம் என்னை
பட்டினி போடப் போகின்றாய்?!

என் உள்ளமும் -  உடலும்
ஒடுங்கிக்கொண்டிருக்கின்றது.,

நீதான் நான்  கேட்கும் கீதம்,
நான் பாடும் சங்கீதம்.

ஆனாலும், நீ எனக்கு வராத ராகம்,.
 என்றாலும் பாடுகிறேன்,
வராமலா போய்விடுவாய்?!...

 நீ

என்னுள் கையெழுத்திட்டவள்,
சற்று அழுத்தமாய் கையெழுத்திட்டாயோ ?!....
என் இதயம் கிழிந்து போனது
உன் ஞாபகங்களை சுமந்து .

உயிரின் பாடல்

உயிரின் பாடல்

உருக்கமான காதற் பாடல்கள்
உன் நினைவினை கீறிவிட்டு
வேடிக்கை பார்கின்றது.
 துயரம் வழிந்தோடுகிறது.,
சில நேரங்களில் நீயும்
பார்த்துப் போகின்றாய்
காதற் பாடல்களே பரவயில்லை!

வாழ்க்கை

வாழ்க்கை

ஷோபனா சின்னதுரை
*வாழ்க்கை
ஒரு வழுக்குப்  பாறை ,
வெகு சிலர்
உச்சத்தில்
மிகப் பலர் 
பள்ளத்தில்.!

* கலவியில்
துவங்கிய பயணம்
கல்லறையில் 
வந்து முடிகிறது!

*இதழின்றி
மலரில்லை,
இதழின்றி
நம் மொழியில்லை ,
மலரும் - மனிதமும்
கடமைப் பட்டவர்கள்
இதழ்களுக்கு!

*பூவின் மொழி
வாசம்,
மனித மொழி
நேசம்!

*வழியெல்லாம் தோழர்கள்,
கரம் குலுக்கும்,
கட்டி அணைக்கும்,
எட்டி மிதிக்கும்,
வெட்டியும் போடும்!

*பருவ வயது
ஒரு இரவு,
தடுமாற்றங்கள் அதிகம்,
இங்குதான்
வாழ்க்கை
பல கிளைகளாக பிரிகிறது.
இந்த
இரவுக்குள்ளே
முடிவெடுக்க வேண்டும்.
இன்றேல்
பகலே இல்லாமல்
போகக்கூடும்!

*சிறகுகள் கட்டி
சிறகடிக்கலாம்,
சருகானாலும் என்ன?!,
சற்றே கண நேர
நெருப்பாக வேண்டும்.

*அழுக்கெதனை
எரித்தாலும்
தீ
தூய்மையானதுதான் .

*மூடிய இமைகளுக்குள்
மட்டுமல்ல,
விழித்திருக்கையிலும்
கனவுதான்,
கனவினை
சுவைத்தே களைத்துப் போனால்
நிஜமாக்கி
மகிழ்வது எப்போது?!

*உலகமெங்கும்
எல்லைக் கோடுகள்,
மனித
மனங்களைப் போலவே,
துண்டு துண்டாய்.,
என்று சேருவது?!
எல்லைகளைக் கடந்து...

*கவலை
பனித் திவலைகளை
நம்பிக்கை சூரியனால்
அழிப்பதை விடுத்து,
பெரு மழையில்
சிறு நெருப்பாய்
அணைந்து போவதேன்?

*சிரிப்பென்பதை
பொருட்காட்சியில்
பார்க்கும்
நிலை வருமோ?!..
அன்பென்பதை
அழியாமல்
காத்துக் கொள்வோம்!

*கருவென்றும்,
குழந்தையென்றும்,
பருவ பறவை என்றும்,
உறவுகளென்றும்,
பிரிவென்றும்,
நோவென்றும்,
சாவென்றும்...,
எத்தனை வேடங்கள்?!...
ஒருத்தருக்கே வாழ்க்கையெல்லாம்

சிறப்பாய் செய்தோமா?!
மனிதமென்று!

*நாவு
தரும் உணவை,
செவி
உண்கிறது.
சில நேரம்,
நாவில் கூர் தீட்டி.,
செவியில் கூர் பார்க்கும்.

இதயங்கள்
அறுந்து விழும்.,
அன்பால் சில.,
ஆணவத்தால் பல.

*வாழ்க்கைச் சட்டம்
சிக்கலானது.
நேர்மையானது.
நாமோ.,
சட்டங்களை மீறியே
பழக்கப் பட்டவர்கள்.
மீறிப் பிறந்தோம்
பல பேர் 
குரங்குகளாக.

*பாவங்களுக்கு
பஞ்சு மெத்தை.,
நல்லவர்களை
ஏமாற்றும் வித்தை.,
என்றே வாழ்ந்துவிட்டு,
புயலடிக்கும் போதுதான்
விழித்துப் பார்கின்றோம்
வானிலை அறிக்கை
கேட்கவில்லையே?!///

*நமக்கு நாமே
நீதிபதி
எனவேதான்
தண்டனையிலிருந்து
தப்பித்து கொள்கிறோம்.!

*அன்பென்பது 
பாவம்.,
பண்பென்பது
கொடியது.,
கல் மனமாய்
பாவத்தால் நிறைகிறோம்.,
கர்வம் பிடித்த
மலைகளெல்லாம்,
பலர் மிதிக்கும்
சாலைகளாகிவிட்டன!


  











சாதி

சாதி
 

சாதி
நீ உன் வாழ்க்கையில் சாதி

சாதிக்க மறந்து உன் வாழ்க்கையில்
நீ செத்தவனாய் ஆகாதே

நிறத்தால் அல்ல
பிறப்பால் அல்ல
பணத்தால் அல்ல
சாதி என்பது

குணத்தால் சொல்லு
நீ உயர்ந்தவன் என்று

சாதி பிரித்து வாழ நீ நினைத்தால்

கீழென்று நீ நினைப்பவன்
சுவாசித்த காற்று
கடந்து வந்த ஆற்று நீர்
நடந்து வந்த பாதை

எல்லாவற்றையும் பிரித்து
உன் சாதி நடந்த பாதையில் மட்டும் நட
நீ உண்மையில் சாதிமான் என
நான் ஏற்று கொள்கிறேன்.!

சாகும் வரை வானம் பார்க்காத
சாக்கடை பன்றி
சாக்கடைதான் உயர்ந்தது என்னுமாம்

வானம் ஒன்று இருப்பதை
அறியும் போது
பன்றிக்கு உயிர் இருக்காது..

நீ சாக்கடை பன்றியா?!!
சாதிக்கும் மனிதனா? 


ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012

போ

போ
முதல் ஸ்பரிசம் 
முதல் முத்தம்
முதல் அணைப்பு
முதல் படர்தல்
 எல்லாம் உன்னுடன்  மட்டுமே

வெறும் காமம் பகிரவில்லை
உன்னுடன் நான் 

என்னை பகிர்ந்தேன்
என் உயிரை பகிர்ந்தேன் 

நீயோ
வெறும் உடலை
பகிர்ந்ததாய் கூறி 
விட்டு செல்கின்றாய்

போ .... போ...

நீ என் உயிர்

உயிர் என்றாலே
உடலைவிட்டு போகத்தானே வேண்டும்!



  

சனி, 4 பிப்ரவரி, 2012

இரட்டை வாழ்க்கை

இரட்டை வாழ்க்கை


எனக்கு தெரியவில்லை
இப்படியெல்லாம் வாழ்வதற்கு

என் கை குலுக்களில் உண்மை இருக்கும்
என் அணைப்பில் அன்பு இருக்கும்
என் பார்வையில் கருணை இருக்கும்
என் வார்த்தையில் கடுமை இருக்கும்

எனக்கு தெரியாது
இரட்டை வாழ்க்கை வாழ


கற்றுக்கொள்ளவும்  விரும்பவில்லை
தெரியாதென்ற வார்த்தை எனக்கு பிடிக்காதுதான்
என்றாலும்
இரட்டை வாழ்க்கை வாழ
எனக்கு தெரியாது என்பது பிடித்திருகின்றது!.

ஏமார்ந்து போயிருப்பேன்
யாரையும் ஏமாற்றியது இல்லை

இரட்டை வாழ்க்கை கொடுமையானது

ஒரு கொலையைவிட கொடுமையானது.!

துறவு

துறவு


ஆசையே   துன்பத்தின் வழி.,

புத்தனின் ஆசை.

ஆசை துறக்க சொன்னவனின் ஆசை

ஆசையே துன்பத்தின் வழி.!


எதை துறந்து துறவியாவது?!

உறவுகளை?!
சொத்துக்களை?!
ஆசைகளை?!
உலக நடைமுறைகளை?!

எதை துறந்து துறவியாவது?!

எல்லாம் துறந்து துறவியானாலும்

துறவி என்பதை அணிந்து கொள்கிறோமே?!

துறவி என்ற பட்டம்

அணிவதுதான் துறவோ?!

துறவி என்பதும் துறக்காத வாழ்க்கைதான்!

முற்றும் துறந்தேன்

என்பவனிடம்

துறந்தேன் என்ற சொத்து இருக்கின்றதே !

துறவியையும் துறக்க வழி என்ன?!

இறைவா

உறவு கடந்த வாழ்க்கை கொடு...

துறவு கடந்த வாழ்க்கை கொடு!.






வெள்ளி, 3 பிப்ரவரி, 2012

மௌனம்

மௌனம்  ஷோபனா சின்னதுரை

மௌனம் உன் இதழ்களில்
இருக்கின்றது!

உன் விழிகளில் இல்லை!

இதழ் மூடி
இத்தனை வார்த்தைகள்
உன்னால் மட்டுமே
பேச முடியும்!

தொலைபேசி அழைப்புகளில்  கூட
மௌனமாய் நீ இருந்தால்
எங்கனம் அறிவேன் நான்
உன் விழி மொழிகளை?!

ஆனால்,

"உன்னை கடந்து வந்த காற்று சொன்னது
அப்பப்பா அவள் இமை பேசும் வேகத்தில்
எனக்கு மூச்சு முட்டியது
உன்னிடம்தான் அவள்
பேசி கொண்டிருந்தாளோ?!"

மெல்ல சிரித்துக் கொண்டேன்

அவள் இமை  பேசியதையே
தாங்கமுடியாத காற்றுக்குத் தெர்யுமா
அவள் என் இதயத்தில்
பேசிக்கொண்டிருப்பது...


வெள்ளி, 27 ஜனவரி, 2012

மனசு

மனசு

என்  நீண்ட நாள் சந்தேகம் அது

எல்லோருக்கும் இருக்குமா?!...

எல்லோருக்குள்ளும் இருக்குமா?!...


பொய்யாய் இருக்குமா?!...

கபடாய் இருக்குமா?!...

வஞ்சகம் சூழ்ந்து இருக்குமா?!...

வஞ்சகம் இன்றி இருக்குமா?!...

சுடுகாடாய் இருக்குமா?!....

பூக்காடாய் இருக்குமா?!...

எப்படி இருக்கும்?!....

அருவருப்பாய் இருக்குமா?!...

அன்பாய் இருக்குமா?!...

எப்படி இருக்கும்?!....

மனசு!...


உங்களுக்கும் - எனக்கும்.  


வியாழன், 26 ஜனவரி, 2012

காதலன்

காதலன்

வந்துவிட்டேன்
காதலன் வந்து விட்டேன் ...

காதலை காதலிக்கின்றேன்
காதலரை காதலிக்கின்றேன்

என்னை யாரும் காதலிப்பார்  இல்லையெனினும்
எல்லோரையும் காதலிகின்றேன்

நான் காதலன்

இந்த உலகின் காதலன்
உயிர்களின்   காதலன்.

எட்டி மிதி
வெட்டி போடு
எரித்து கொல்
இன்னும் என்னென்ன  சித்திரவதைகள்  உண்டோ
அத்தனையும் செய்..

உயிர் போகும்  கடைசி வினாடியும்
என் இதழ் பூக்கும் ஒரு புன்னகை

அது என் காதல் சொல்லும்.

ஏனெனில்

நான் இந்த உலகின் காதலன்.


வெள்ளி, 20 ஜனவரி, 2012

கடைசி கடிதம்

கடைசி கடிதம்


கடைசியில் அது நடந்தேவிட்டது.,

என் கடைசி கடிதம் எழுதும் நேரம்...,

நான் 
இது வரை வாழ்ந்த வாழ்க்கை எது?

என்னால் யாருக்கு பயன்?

என்னால் யாருக்கு கேடு?

என் மனசாட்சிக்கு நல்லவனாய்  இருந்தேனா?

இல்லவே இல்லை.. 

இதுதான் வாழ்க்கையா?

போதும் கடவுளே

நல்லதோ - கேட்டதோ.. 

போகட்டும் கடவுளே....

நான்  வாழவேண்டும் என்று நினைத்த

அப்பாவிகள் என்னை மன்னிக்கட்டும்.

நான் போகிறேன்....

யாருக்காக தெரியுமா?

நான் சாக வேண்டும் என்று

ஒரு நொடியேனும் வேண்டிய

நல்ல உள்ளங்களுக்காக .

என்னை குறித்த நல்லவைகள் நிலைக்கட்டும்...

தீமைகள்

என்னோடு மறையட்டும். 


அறுந்ததென்ன?!

அறுந்ததென்ன?!


மணி அறுந்ததென்று
நூலை விட்டுப் போனாய்..,
ஞாபகச் சின்னமாய்
கணையாழியை விடுவது போல!

அதில்
என் மனதை
கோர்த்து வைத்திருக்கின்றேன்!

(பி. கு)
என் மனமும்
அறுந்துவிட்டது..,

அந்த நூலில்கூட  நீ
 பிரிவு மருந்துதான்
தடவி இருந்தாயோ ?!





காதலி காதலை

காதலி காதலை 





காதலி நண்பா..,
உலகத்தில் உள்ளதிலே
கடினமானது எது என்று
அறிந்து கொள்வாய் !

காதலி நண்பா..,
பிரிவின் கொடுமையை
நொடி கூட உணர்த்தும்
என்பதை உணர்ந்து கொள்வாய்.!

காதலி நண்பா..,
அவள் கசக்கி எறிந்த
காகித துண்டு சொத்து பத்திரங்களைவிட
முக்கியமானது என பொதிந்து கொள்வாய்.!

காதலி நண்பா..,
உன் வயது மறக்கும்.,
உன் உணவு மறக்கும்.,
உன் தூக்கம் மறக்கும்.,
உன் உறவு மறக்கும்.,
உன் நட்பு மறக்கும்.,

காதலி நண்பா.,

உன்னை காதலி பிரிந்தாலும்
காதலை காதலி நண்பா..,
உன் மனதுள் வலி இருந்தாலும்
கண்களை ஓரம்
கண்ணீர் துளிர்க்க
காதல் சிரிப்பூ மலரும்.

காதலி நண்பா
காதலியின்  
புறக்கணிப்பு உன்னை ஒரு
உலகம் போற்றும் கவிஞனாக்கும் . 






பெண்ணே

பெண்ணே


நெரிசல் பேருந்தில்
இடித்த உன்னை
தவிர்த்த எனக்கு
நன்றிப் பார்வைகளை
அளித்து விட்டு
மீண்டும் நிற்கின்றாய்
என்னை இடித்து
 நீயோ
பாது காப்பாய் உணர்கிறாய்
நானோ
பரிதவித்து நெளிகிறேன் .!

வியாழன், 19 ஜனவரி, 2012

மரணம்

மரணம்

மரணம்  என்பது
பயமாய் இருக்கிறது எனக்கு .,

மலரின் மரணம் -  விதை
விதையின் மரணம் - உயிர்

நீரின் மரணம் - மேகம்
மேகத்தின் மரணம் - மழை

ஒன்றின் முடிவே அதன் தொடக்கம்

குழந்தையின் மரணம் - இளமை
இளமயின் மரணம் - முதுமை.,

எல்லா உயிர்களிலும்
சிறந்தது மனித உயிரே .,
கருவானது முதல்
விதைப்பதற்கான விதை !

மரணம் என்பது
பயமாய் இருந்தது எனக்கு முன்பு!.



திங்கள், 16 ஜனவரி, 2012

ஜல்லி கட்டு

ஜல்லி கட்டு

உனக்கும் எனக்கும்
தினம் தினம் ஜல்லி கட்டுதான் 

உன்  பார்வை கொம்புகளில் 
காயப்படுகிறேன் .

அடக்குகிறேன் என்கின்ற போர்வையில்
உன்னிடம் தினம் அடங்கி கிடக்கின்றேன்.

வீரன் என்பது எல்லாம்
உன்னிடம் கனவுதான் போலிருக்கின்றது.  
உன் வார்த்தைகளில் மிதி பட்டு 
உன் முத்தகளால் மருந்திடப் படுகிறேன்.

உன்னிடம் தோற்ற எனக்கு 
என்றும் வெற்றிதான்.

வெற்றி உனதும் இல்லை
எனதும் இல்லை...

நமது வெற்றி

நம் ஒவ்வொரு ஜல்லி கட்டும்
நம்மை கட்டும் ஒன்றோடு ஒன்றாக.




  



புதன், 11 ஜனவரி, 2012

காதல் ?!

காதல் ?!

குளிருக்கு  இதமாய்
 உன் பார்வை கொடென்றேன்.
என் இதழ் முத்தம்
கசகின்றதோ?!
எனக் கேட்டு கொதிக்க வைத்தாய்.


சமாதனம் பண்ண
செலவானதெனக்கு பல முத்தங்கள்.


மனதுக்குள் சங்கடம்
கொஞ்சம் உன் கைக்குள்
முகம் புதைக்கவா என்றேன்.
ஏன் என் மடி
வெருக்கின்றதோ என்றாய்!


சமாதானம் பண்ண
செலவானதெனக்கு சில சீண்டல்கள்.


சந்தோசமாய்  இருக்கிறேன் என்று 
உன் நெற்றி முத்தமிட்டேன்
என் இதழ் கசந்தததா
 என கேட்டு தவிக்க வைத்தாய்.


சமாதானம் பண்ண
செலவானதெனக்கு நீண்ட பல இதழ் முத்தங்கள்.


நீ ஒரு புதிர்தான்....


தாகம் என்று சொல்லும் போது உன்  எச்சிலும்.,
மோகம் என்று சொல்லும் போது உன்....


காதலும் மோதலுமாய்
நீயும் - நானும்.
  



செவ்வாய், 3 ஜனவரி, 2012

என் அன்பான சகோதரர்களே - சகோதரிகளே

வணக்கம்
என் அன்பான சகோதரர்களே - சகோதரிகளே ., யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று உலகுக்கே வழி காட்டியது நம் தமிழ் சமூகம். இன்றோ, தங்க்லீஷ் பேசிக் கொண்டு ., பீசா, பர்கர், என்று சாப்பிட்டு நம் வாழ்க்கை முறையே ஒரு அமெரிக்கன் போல மாற்றிக் கொண்டோம்.
    ஏற்கனவே நம் தமிழ் கலாச்சாரம் மதங்களின்  படையெடுப்பால்  5000  ஆண்டுகளாகவே நமது தமிழ் கலாச்சாரம் அழிவுற்று., சாதிகளாகப் பிரிந்து இன்று நாம் யார் என்பதே மறந்து வாழ்கின்றோம்.
    அதிலும் கடந்த 2000 ஆண்டுகளாகவே வரலாற்றை கவனித்துப் பார்த்தால்  அதிகாரங்களில் மதங்களின் ஆதிக்கம் ரொம்பவே ஓங்கி இருப்பது தெரியும்.
    நமது குறுந் தெய்வ வழிபாட்டை விட்டு விட்டு கவர்ச்சியான மதங்களின் பின்னே ஓடி ஓடி திராவிடன்  என்ற பதம் மறைந்து. நீ என்ன சாதியை சார்ந்தவன் என்று பார்க்கும் இழி பிறவிகளாய் மாறி விட்டோம். ஈதேனும் ஒரு வகையில் ஒரு சாதியை ஒரு சாதி தாழ்ந்தவனை பார்த்து நான் உயர்ந்தவன் என்று மார் தட்டிக் கொண்டதினால் சாதியில் இருந்து அது  தரும் போதையில் இருந்து நாம் வெளிவர முடியாமல் இன்னமும் அடிமையாய் இருகின்றோம். என்ன சொல்வது நமது மண்தான் திருக்குறள் கொடுத்தது., மேலும் மதங்களின் படையெடுப்பில் தீயலிட்டு எரிக்கப்பட்ட நம் முன்னோர்களின்  புத்தகங்கள்  மத ஆக்கிரமிப்பாளர்களுக்கு அச்சத்தைக் கொடுத்தது  இன்றோ  எல்லா பெருமையும் இழந்து  அடிமையாய் நிற்கின்றோம் இந்த நிலை மாறுமா? என் சகோதர - சகோதரிகளே.....

      வெளியே வருவோம் இந்த சமூகத்தில் தமிழனின்  என்ன என்பதை உலகுக்கு எடுத்து சொல்வோம்.
                              
                                                                  ALEXANDER PANNEERSELVAM

                                                                                

இலங்கை மண்

இலங்கை மண்
ஷோபனா சின்னதுரை
இலங்கை எம் மக்களை
இம்சிக்கும் மண்,
இதுதான் எங்களின் பூர்வீக மண்ணென்று
இயம்ப முடியத் மண்
இலங்கை மண்.


நாடு கடத்தப் பட்ட ஒரியாக் காரன்
நாடி வந்த இடம் எம் மண்.
நல்ல சோறு
நல்ல வீடு
நல்லாதரவும் கொடுத்து இன்று
நாங்கள்தான்
நாடு கடத்தப்பட்டு
நட்டாற்றில் நிற்கிறோம்.


வந்தாரை வாழ வைத்தோம்
வறியவர்க்கு பொருளளிதோம்
வஞ்சனை செய்வானென்று நினைக்கவில்லை.
வாஞ்சையாய் பார்ததற்குதான்
வயிற்றில் அடித்துவிட்டான் - எங்கள்
வாழ்வை கெடுத்துவிட்டான்.



தாய்மை கொண்டவனை
தாலாட்டி மடி சேர்த்தோம்
தரம் தாழ்ந்து போன அவனோ
தலை  மீது மிதித்துவிட்டான்.


தலை நிமிர்வோம்
தலையெடுப்போம் - இந்த
தரணிக்கே மூத்த குடி
தமிழன் என்று பறையடிப்போம்.


குமரி முதல் இமயம் என் வீடென்று
வரலாறு சொல்கிறதாம்.,
லெமூரிய கண்டம்
தமிழரின் பூமி என்று
ஆய்வுகள் சொல்கிறதாம்.,


ஐயா.,


எங்களுக்கு வரலாறு வேண்டாம்
சொந்தமாய் சிறு குடிசை போதும்
அதிலே நிம்மதியாய் ஒரு வாழ்க்கை வேண்டாம்
நிம்மதியாய் ஒரு மரணம் வேண்டும்.


ஒ.,


உலகமே., 


நாங்கள் அழிக்கப்பட்ட பொது நீ
அழவில்லை.,
இன்றோ அழிவதற்கொன்றும் இல்லை.,


எனக்காய் நீ குரல் கொடுக்க வேண்டாம்
எனக்காய் நீ போராட வேண்டாம்


எனக்கே எனக்கென்று தனியாய் ஒரு வீடு
அதில் பங்கு போட யாரும் வேண்டாம்


நான் செத்தாலும் நீ பார்க்க வேண்டாம்
வாழ்ந்தாலும் நீ பார்க்க வேண்டாம்
நீ சந்தோசமாய் இரு
என்னை நீ மறந்துவிடு


மறக்கப்பட்ட இனமாக இருந்தாலும்
நிம்மதியாய் என்னை சாகவிடு.


நீ  தலைமுறை தலைமுறைக்கும்

நன்றாய் இருப்பாய். 
.







ஞாயிறு, 1 ஜனவரி, 2012

விடியல்

 விடியல்
 அலெக்சாண்டர் பன்னீர்செல்வம்

2012 
பிறந்து விட்டது
ஒரு வருடத்துடன் இன்னொரு வருடம்,
ஒரு  சூரியன் மறைந்து உதிப்பது போல,
உலகம் சுற்றுவது போல.,
இன்னொரு வருடம் பிறந்து விட்டது.

இன்று வரை
மாற்றம் ஏதும் தெரியவில்லை

மற்றொரு நாள் விடிந்திருக்கின்றது  அவ்வளவே..

இதோ மாலையும் ஆகி விட்டது,
இரவும் வரும் - நாளை  பகலும் வரும்...

ஆனால்,

வருமா ஒரு விடியல் 

என் ஈழத்து மண்ணில்

எம்மக்களுக்கு உரித்தான விடியல்?

சிங்களக் காடையன் 
கை பிடித்திழுக்காத விடியல் வேண்டும்.,
எம் மண்ணில் தன் விதை
விதைத்துவிட்டு போனவனின் தோட்டத்தில்
என் விதைகளை  நடும் நாள் வேண்டும்., 

சிதைந்து போன எம் பிஞ்சுகளின்
முகத்தில் நிரந்தர  ஒளி வேண்டும்.
தாயிழந்து - தந்தை இழந்து
வாழ்விழந்து வாழும் என்
தமிழ் சாதி தலை நிமிர்ந்து வாழும்
பொன் நாள் வேண்டும்,

புது வருடம்-
எத்தனையோ சோதிடர்கள்.,
எத்தனையோ சாமியார்கள்  
யாருமே எங்களின் விடியலை
பற்றி சொல்லவில்லை .

பொடியன்கள் இல்லை
இன்று அனைவருமே பொடியன்களாய்
என்று வெடிப்போமோ 
அன்று ஒரு வேளை விடியுமோ ?!.,
இல்லை எங்கள் வாழ்வு முடியுமோ ?!

வெடிப்போம் ஒரு நாள்
அன்று பிறக்கும் எம்மக்களுக்கு
புது வருடம்!.
ஈழத்தில் தமிழன் இருந்தாலும் சரி
முற்றும் ஒழிந்தாலும் சரி 
 பிறக்கும் எம் மக்களுக்கு  விடியல்     
           

தமிழனென்றால்
எங்கு சென்றாலும் அடிதானா?!

என் உலகே உனக்கு 
நாகரிகம் சொன்னவன் நானல்லவா 
உலக பொதுமறை தந்தவன் நானல்லவா

என்ன செய்யட்டும் இன்றோ
உலகுக்கே எல்லாம் தந்த 
என் தமிழனுக்கு
தண்ணீர் தருவதென்றால் 
எல்லோருக்குமே பிடிக்கவில்லை
தமிழென்று பேசாமல்
திராவிடமென்று பேசினோம் 
தமிழனென்று  கூறாமல் 
இந்தியன் என்று கூறினோம்.,
 ஆனால் தண்ணீர் பெறவே போராடினோம்
சக இந்தியனோடு.,
கன்னட சகோதரன்
காவேரியில்   கழுத்தறுப்பான்.,
சுந்தர தெலுங்கு என்றோம் அவனோ
பாலாற்றில் எம் பல்லுடைப்பான்.,
சரி.. சரி...
நல்லவன் என் மனம் பிடித்த 
மலையாளத்து சகோதரன் என்றால் .,
பெரியாரில் சிறியாராகி
எம்மை அடித்து விரட்டுவான்.,

என்றுதான் எம் மண்ணுக்கு விடுதலை?!

சரி பார்ப்போம் இந்த புத்தாண்டாவது
புதியதை தருகின்றதா என்று

அது வரை எமக்கு
எல்லா ஆண்டும்  ஒரே ஆண்டே!.