சனி, 21 ஜூலை, 2012

பிரிவு

பிரிவு


தேங்காய் உடைத்து
எல்லோரும் கடை மூடும்
ஒரு வெள்ளிக் கிழமை
என் இதயம் உடைத்து
நம் காதலை மூடினாய் !

குருதியால் எழுதிய
என் கடிதம் கண்டு நீ
கதறி அழுது தோள் சாய்ந்து
" வேண்டாண்டா ,
இப்படி செய்யாதே!"
என்றென்னை அணைத்துக்கொண்டாய் !

ஆற்றோர மாலை சந்திப்பில் ,
விளைந்த நெற் கதிராய்
மடியில் சரித்து என் மீது
கவிழ்ந்து கதைப்பாய்
இதயங்களின் பாச மொழி
இதழ்களில் படிக்கப்பட்டுக்கொண்டிருக்கும்!

குளிர் கால சூரியன் போல 
தாமதமாய் வந்து 
சீக்கிரமாய் போய் விடுவாய் ,
கழிந்த  நொடிகளிலும்
சேர்ந்து  களித்த நொடிகளிலும் 
வாழ்ந்து...... வாழ்ந்து.,
சிரித்து ....... சிரித்து .,
நினைத்து ...... நினைத்து.,
உருகி ....... உருகி
கவிதைகள் எழுதிக்கொண்டிருப்பேன் .,
அடுத்த சந்திப்பில்
படித்து பாராட்டி தலைகோதி
" என் மீது
இவ்வளவு காதல?!".,
என்று ஆச்சரியம் காட்டி
என் தோள்  புதைவாய்!

திரைப்பட அரங்கின்
மெல்லிய இருட்டில்
விரல்கள்  சேர்த்து இறுக்கி
பிரியோம் என்
உறுதி மொழி எடுத்தோம்!

உன் அம்மாவுடன் வரும்பொழுதும் .,
அப்பாவுடன் வரும்பொழுதும் .,
தம்பியுடன் வரும்பொழுதும்
யாரும் உணரா சாடைகள் மூலம்
உறவினை அறிமுகம் செய்து
மின்னல் வெட்டாய்
குறும்பாய் சிரித்துப் போவாய்!

பிரியோம் ..... பிரியோம்  என 
நான் இருமர்ந்திருந்த பொழுதினில்தான் 
நீ............... 

நீச்சல்

நீச்சல்


ஒரு
பூவின் இதழ்களை....
இதழ்களின் வேர்வையை 
பனி துளிகளை 
நாசி படர  நுகர்ந்து .....

தாமரைத் தண்டினை
வளைத்தெடுத்து .,
மலரா மொட்டுகளில் நீந்தி ..,
ஆழக்குளத்தரை  தொட்டு .,
மகிழ்ந்து களைத்து
கரையினில் அயர்ந்தேன் .,
பரிவும் உயிரும் கசிய
அன்பாய் அலைகளால்
என்னைத் தடவ
அரைக்கண்கள் திறந்து பார்த்தேன் .,

தளர்ந்த உன் கண்கள்
என் உயிரினை கட்டி
ஆதரவாய் படர்ந்திருந்தது!




வெள்ளி, 20 ஜூலை, 2012

காதல்

காதல்

காதலுக்கு முகவரி கொடுத்தவர்கள்
என்று சிலரை சொன்னார்கள் .,

ரோமியோ - ஜூலியட்
அம்பிகாபதி - அமராவதி .,
லைலா - மஜ்னு .,
அனார்கலி - சலீம் .,
ஷாஜஹான் - மும்தாஜ்
என உதாரண ஜோடிகள் நீள.,

மெள்ள  காதலை  கேட்டேன் .,
"இவர்களின் முகவரியிலா
வாழ்ந்து கொண்டிருக்கின்றாய் ?!"

நகைத்தது காதல் .,

"உலக தோற்றத்தின்
உயிர் நான்.,
ஒவொரு உயிரின்
சுவாசம் நான்.,
மனிதனில் உருவாகவில்லை நான்
அணுக்களில் தொடங்கி கருவானேன் !
இவர்கள் எனக்கு முகவரியல்ல
என் முகவரியில் அவர்கள் வாழ்கிறார்கள்."

"எப்படி?! " என்றேன்.

"காதல் இல்லையேல் 
இந்த காவியங்கள் இல்லையே !." 

வியாழன், 19 ஜூலை, 2012

அன்பு

அன்பு

அன்பு  செய்
அன்பு தீர்ந்து போகும் வரையல்ல !
நீ தீர்ந்து போகும் வரை !

கோபம் கொள்
நீ தீர்ந்து போகும் வரையல்ல
தீது தீர்ந்து போகும் வரை!

காதல் செய் 
காதல் முடியும் வரையல்ல 
உலகம் முடியும் வரை !

நன்மை  செய் 
கொஞ்சம் உன் பொருட்டும் 
பெய்யட்டும் மழை ! 

கிறுக்கல்

கிறுக்கல்


மழலையின் கிறுக்கலுக்கும்
உயர் அதிகாரியின் கையொப்பத்திற்கும்
வேறு பாடுகள் பல உண்டு !

அது அழகாயிருந்தது ,
இது அவசியமாய் இருந்தது !

அது உயிரை  நிறைத்தது ,
இது வயிறை  நிறைத்தது !

அது வெற்று காகிதம் முழுதும் நிறைக்க,
இது ஒரு மூலையில் அடங்கும் !

அது கோப்புகள் பிரிதறியாது .,
இது கோப்புகள் பார்த்தெழுதும் !

சொல்லவெல்லாம்  எத்தனையோ  இருந்தாலும் 
தன் மழலையின் கிறுக்கலுக்கு
உயர் அதிகாரியும்  அடிமைதான் !.