செவ்வாய், 1 ஜூன், 2021

 கண்ணீர் அஞ்சலி

சுவரொட்டி அடிக்க நேரமில்லை.,


வழிவிடவும்

பங்காளிகள் தேவையில்லை..,


உறவுக்கும் - நட்புக்கும்

செய்தியில்லை...,


ஒரு முழப்பூவும்

மேலே விழுவதில்லை ...,


சிறுதுளி கண்ணீரும்

உடல் நனைக்கப் போவதில்லை ...,


வாழ்ந்த வீட்டின் வாசலிலும்

வைத்தெடுக்கப் போவதில்லை...,


இயந்திரம் தோண்டிய பள்ளத்துள்

உறவுகள் முதல் மண் 

தள்ளப்போவதில்லை....


தகனமேடையில் சற்று முன்னெரிந்த

சாம்பலும் அகற்ற நேரமில்லை....,


பெருந்தொற்று மரணங்களுக்கு

பின்னொரு நாளில் அழுதுகொள்ளலாம்,

தனித்து-விலகி வீட்டுக்குள்

உயிர் பிழைத்துக் கிடப்போம்....


ஊரடங்கிற்கடங்கேனென்றால்

வாருங்கள் சற்று

மருத்துவமனை வாயில்களுக்கு,

பிணவறைக்குச் செல்லவும் நேரமின்றி

இடுகாடுகளை நோக்கிச் செல்லும்

நேற்றைய மனிதர்களைக் காணலாம்.


இடுகாடுகளுக்கு வாருங்கள்

எந்த வரிசையிலும் நிற்க விரும்பாதவர்கள்

எரிக்கப்படவும் - புதைக்கப்படவும்

வரிசையிலிருப்பதை காணலாம்.


மருந்தற்ற நோயோ

தவிர்க்க முடியாத நோயோ

இதுவல்ல.....


பெருந்தொற்றின் தொடரறுக்கத் தேவை

முதலில் தனிமை

பின்னர் தேவை

சித்தமும் -ஆயுர்வேதமும்-அலோபதியும்.


அதுவரை 

நாம்

தனித்திருப்போம் - விலகியிருப்போம்

மனித உணர்வுகளை நசுக்கித்தள்ளும்

பெருந்தொற்றின் தலையறுப்போம்.


              - அலெக்சாண்டர் பன்னீர்செல்வம்-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக