வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

தொட்டில் குழந்தையின் தாலாட்டு !...

தூளியிலே போட்டு என்னை
தாலாட்ட வேண்டாம் அம்மா!

மடியினில் ஏந்தி எனக்கு
பாலூட்ட வேண்டாம் அம்மா!

போகையிலும் - வருகையிலும் என்னை
சுமந்து திரிய வேண்டாம்  அம்மா!

காலிலே கிடத்தி என்னை சுடுநீரில் 
குளிப்பாட்ட வேண்டாம் அம்மா!

பொட்டிட்டு  பூவிட்டு புத்தாடை எனக்கு
அணிவிக்க வேண்டாம் அம்மா!

உன் பார்வையினோரம் என்னை ஒரு
கிழிந்த பாயிலேனும் கிடத்தி
பார்த்திருக்கக் கூடாதா அம்மா?!

பெண் என்று என்னை அநாதையாக்கிவிட்டு 
வீதியிலே போட்டு விட்டாய் .,

யாரேனும் கண்டெடுக்கும் முன்பு என்னை 
ஒரு பூனை கடித்து தின்னலாம் .,
தெரு நாய்கள் குதறலாம்.,
கொடும் வெயிலும் சுடலாம்., 
கடும் மழையிலும் நனையலாம்.,
உன் மடி தரும் பாதுகாப்பை
இந்த தெரு தருமா அம்மா?!

பயங்கொள்ளும் கனவு கண்டு 
வீறிட்டு நானழுதால் 
யாரென்னை அள்ளி எடுத்தணைத்து 
ஆற்றித் தேற்றுவார் அம்மா?!

பசி கொண்டு நானழுக 
எந்த பால்மடி ஊறி எந்தன் 
பசி தீர்த்து மகிழுமம்மா?!

வளரும் பொழுதினிலே அநாதை என்றென்னை 
யாரேனும் இடித்துரைக்க நேரலாம்,

முறை தவறி பிறந்தவள் என என்னை
பழி கூறி தூற்றலாம் !

என்றோ நீ செய்த கனநேர தவறுக்கு
என்னாயுள் முழுவதும் என்னை
தணலிலே விடுவது ஞாயமா அம்மா?!
குறையுள்ள தாய் ஒருத்தியும்  இல்லையாம்,

உண்மையை சொல் அம்மா.,
நீ தாயா? - பேயா?!
என் வாழ்க்கை பாதையெங்கும்
பெயர் தெரியா அம்மா ..,
முகம் தெரியா அம்மா....
உன் பெயர் தாங்கிய முட்க்கள்தானே!.

நீ பிறவா  நொடிகள் இருந்திருதால்
எத்துனை நலமாய் எனக்கு
இருந்திருக்கும் அம்மா !








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக