திங்கள், 6 பிப்ரவரி, 2012

வாழ்க்கை

வாழ்க்கை

ஷோபனா சின்னதுரை
*வாழ்க்கை
ஒரு வழுக்குப்  பாறை ,
வெகு சிலர்
உச்சத்தில்
மிகப் பலர் 
பள்ளத்தில்.!

* கலவியில்
துவங்கிய பயணம்
கல்லறையில் 
வந்து முடிகிறது!

*இதழின்றி
மலரில்லை,
இதழின்றி
நம் மொழியில்லை ,
மலரும் - மனிதமும்
கடமைப் பட்டவர்கள்
இதழ்களுக்கு!

*பூவின் மொழி
வாசம்,
மனித மொழி
நேசம்!

*வழியெல்லாம் தோழர்கள்,
கரம் குலுக்கும்,
கட்டி அணைக்கும்,
எட்டி மிதிக்கும்,
வெட்டியும் போடும்!

*பருவ வயது
ஒரு இரவு,
தடுமாற்றங்கள் அதிகம்,
இங்குதான்
வாழ்க்கை
பல கிளைகளாக பிரிகிறது.
இந்த
இரவுக்குள்ளே
முடிவெடுக்க வேண்டும்.
இன்றேல்
பகலே இல்லாமல்
போகக்கூடும்!

*சிறகுகள் கட்டி
சிறகடிக்கலாம்,
சருகானாலும் என்ன?!,
சற்றே கண நேர
நெருப்பாக வேண்டும்.

*அழுக்கெதனை
எரித்தாலும்
தீ
தூய்மையானதுதான் .

*மூடிய இமைகளுக்குள்
மட்டுமல்ல,
விழித்திருக்கையிலும்
கனவுதான்,
கனவினை
சுவைத்தே களைத்துப் போனால்
நிஜமாக்கி
மகிழ்வது எப்போது?!

*உலகமெங்கும்
எல்லைக் கோடுகள்,
மனித
மனங்களைப் போலவே,
துண்டு துண்டாய்.,
என்று சேருவது?!
எல்லைகளைக் கடந்து...

*கவலை
பனித் திவலைகளை
நம்பிக்கை சூரியனால்
அழிப்பதை விடுத்து,
பெரு மழையில்
சிறு நெருப்பாய்
அணைந்து போவதேன்?

*சிரிப்பென்பதை
பொருட்காட்சியில்
பார்க்கும்
நிலை வருமோ?!..
அன்பென்பதை
அழியாமல்
காத்துக் கொள்வோம்!

*கருவென்றும்,
குழந்தையென்றும்,
பருவ பறவை என்றும்,
உறவுகளென்றும்,
பிரிவென்றும்,
நோவென்றும்,
சாவென்றும்...,
எத்தனை வேடங்கள்?!...
ஒருத்தருக்கே வாழ்க்கையெல்லாம்

சிறப்பாய் செய்தோமா?!
மனிதமென்று!

*நாவு
தரும் உணவை,
செவி
உண்கிறது.
சில நேரம்,
நாவில் கூர் தீட்டி.,
செவியில் கூர் பார்க்கும்.

இதயங்கள்
அறுந்து விழும்.,
அன்பால் சில.,
ஆணவத்தால் பல.

*வாழ்க்கைச் சட்டம்
சிக்கலானது.
நேர்மையானது.
நாமோ.,
சட்டங்களை மீறியே
பழக்கப் பட்டவர்கள்.
மீறிப் பிறந்தோம்
பல பேர் 
குரங்குகளாக.

*பாவங்களுக்கு
பஞ்சு மெத்தை.,
நல்லவர்களை
ஏமாற்றும் வித்தை.,
என்றே வாழ்ந்துவிட்டு,
புயலடிக்கும் போதுதான்
விழித்துப் பார்கின்றோம்
வானிலை அறிக்கை
கேட்கவில்லையே?!///

*நமக்கு நாமே
நீதிபதி
எனவேதான்
தண்டனையிலிருந்து
தப்பித்து கொள்கிறோம்.!

*அன்பென்பது 
பாவம்.,
பண்பென்பது
கொடியது.,
கல் மனமாய்
பாவத்தால் நிறைகிறோம்.,
கர்வம் பிடித்த
மலைகளெல்லாம்,
பலர் மிதிக்கும்
சாலைகளாகிவிட்டன!


  











கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக